“குறை சொல்லறவங்க சொல்லிட்டு இருப்பாங்க, களத்துல யார்னு மக்களுக்கு தெரியும்” – மேயர் பிரியா.!
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கியுள்ளார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பெய்த இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது. அப்பொழுது, செய்தியாளர்களிடைம் பேசிய மேயர் பிரியா, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
இது தொடர்பாக மேயர் பிரியா பேசுகையில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து பணியாளர்களும் களத்தில் உள்ளனர். புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகள் தாழ்வானப் பகுதி என்பதால் தண்ணீர் தேங்கியுள்ளது.
இருந்தாலும், பல பகுதிகளில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடம் பெறப்படும் புகார்கள் அடுத்தடுத்த சரிசெய்யப்படுகின்றன. குறை சொல்லறவங்க சொல்லிட்டு இருப்பாங்க, களத்துல யார் இருக்காங்கனு மக்களுக்கு தெரியும்.” இவ்வாறு கூறியுள்ளார்.