வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பரிசை வாங்கலாம் – அமைச்சர் செல்லூர் ராஜு
பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள் பண்டிகை முடிந்ததும் பரிசை வாங்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.அதன்படி டோக்கனும் வழங்கப்பட்டது.அதாவது முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்,தமிழ்நாடு முழுதும் பொங்கல் பரிசு 4 ஆம் தேதி வழங்கப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பொங்கல் பரிசு வழங்கப்படும்.பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பரிசை வாங்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.