சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த ‘அந்த’ 6 பேர்.! திருப்பூரில் அதிரடி கைது.!
தகுந்த ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய 6 இளைஞர்கள் வேலை தேடி இந்தியா வந்துள்ளனர். மேலும், இவர்கள் 6 பேரும் கவுகாத்தி வழியாக திருப்பூருக்கும் வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 6 இளைஞர்களும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கூலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்த்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்,நேற்று அந்த இளைஞர்கள் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு சுற்றித் திரிந்த அவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த காவல்துறையினரை கண்டதும் ஓடியதாக கூறப்படுகிறது. அவர்களை விரட்டி சென்று காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களை துரத்திப் பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
அப்போது அவர்கள் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் கொடுத்துள்ளனர். இதனால் மேற்கொண்டு சந்தேகம் அடைந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் வேலைத் தேடி திருப்பூருக்கு வந்ததும், பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்ததும் மற்றும் அவர்களிடம் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாததும் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களிடம் வங்கதேச நாட்டின் அடையாள அட்டை மட்டுமே இருந்துள்ளது. இதனால், திருப்பூர் தெற்கு காவல் துறையினர் அந்த 6 வங்கதேச இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைத்துள்ளனர்.