தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து அவதூறான ஆடியோ வெளியிட்டவர் கைது!
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து அவதூறான ஆடியோ வெளியிட்டவர் கைது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து, முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த, கல்முருகன் என்ற வேல்முருகன் அவதூறான ஆடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கல்முருகன், வ.உ.சி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பேசியுள்ளார்.
மேலும், அந்த ஆடியோவில், இந்த கல்லூரியில் தங்கள் சாதி மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்றும், மற்ற சாதி மாணவர்கள் எல்லாம் ஏன் வருகிறீர்கள் என்றும் இழிவுபடுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
இவர் பேசிய இந்த ஆடியோ வாட்சப்பில் வைரலான நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இந்த ஆடியோ தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, போலீசார் இந்த ஆடியோ வெளியிட்ட கல்முருகன் என்ற வேல்முருகனை கைது செய்தனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தான், அடிதடி வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் தன்னுடைய சமூகத்தில், ஒரு சாதிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், தான் சாதியை முன்னிறுத்தி பேசியதற்காக, தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில், தங்களது கருத்தை பதிவிடுவதாக எண்ணி, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.