தூத்துக்குடி : மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல்வர் ஆய்வு ….!
தூத்துக்குடியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல்வர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக பிற்பகல் ஒரு மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வர உள்ளார். அங்கிருந்து கார் மூலமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.