தூத்துக்குடி துப்பாக்கி சூடு : இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு.! – விசாரணை குழு பரிந்துரை.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என அறிக்கையில் தகவல்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை, முதல் துப்பாக்கிசூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர் தான் ஆட்சியர் வளாகத்திற்குள் முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. காவலர் சுடலைக்கண்ணு என்ற shooter அபாயகரமான துப்பாக்கியை கொண்டு 17 ரவுண்டுக்கு சுட்டுள்ளார்.
ஆட்சியர் வளாகத்தில் தற்காப்புக்காக துப்பாக்கிசூடு நடத்தியதாக நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் தெரிவிக்கவில்லை. எனவே, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதும், அவரது அலட்சியமான நடவடிக்கையே போராட்டம், துப்பாக்கிச்சூட்டில் முடிய அடித்தளமாக இருந்ததாக கூறப்படுகிறது. தூத்துக்குடி கலவரம் நடந்து கொண்டிருந்த போது மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் ஊரிலேயே இல்லை. துப்பாக்கிச்சூட்டின் போது காட்டில் வேட்டையாடுவதுபோல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டிருக்கிறார்.
தூத்துக்குடி கலவரத்தில் கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர். போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே, 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணையை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து இருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.