பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் கருத்து கூறிய ரஜினிகாந்த்.! திருமாவளவன் சாடல்.!
டாஸ்மாக் திறப்பு குறித்து ரஜினி பதிவிட்ட கருத்து பாம்பும் சாகாமல், தடியும் நோகாமல் இருப்பது போல உள்ளது. என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 4 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அதன்படி, கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுக்கடைகளில் சரியான சமூக விலகலை பின்பற்றவில்லை என சில காரணங்கள் கூறி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் திறக்கும் தமிழக அரசின் திட்டம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்.’என பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவிட்டிருந்தார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
ரஜினி பதிவிட்ட கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், ‘ ரஜினியின் கருத்தானது பாம்பும் சாகாமல், தடியும் நோகாமல் இருப்பது போல உள்ளது. அவர் அதிமுக அரசை விமர்சிக்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா என சந்தேகம் தோன்றுகிறது.
மதுக்கடைகளை மூட வேண்டும். அது மக்களுக்கு செய்கிற துரோகம் என உயர்நீதிமன்றம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என்று கூட அவரால் வெளிப்படையாக கூறமுடியவில்லை.’ என தனது கருத்தை திருமாவளவன் பதிவிட்டார்.