இந்த முறை சொந்த சின்னத்தில் போட்டி – மதிமுக அறிவிப்பு.!
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் ம.தி.மு.க. குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜூனராஜ், செந்திலதிபன், அந்திரிதாஸ், சேஷன் ஆகிய 4 பேர் கொண்ட குழு பங்கேற்றனர். திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு பின், திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மக்களவை தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகளை கேட்டுள்ளோம். 2 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கக் கேட்டுள்ளோம். இந்த முறை எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
கடந்தமுறை விட கூடுதல் தொகுதிகளை கேட்டு உள்ளோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.!
மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதுதான் கட்சி நிலைப்பாடாக உள்ளது, இதுகுறித்து திமுக குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். கடந்த முறை ஈரோடு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு திமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது.