இந்த போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது – திருமாவளவன்
தமிழ் மொழிக்காக பாஜக நடத்தும் போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது என திருமாவளவன் விமர்சனம்.
சென்னை அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலையை தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அம்பேத்காரின் முழு உருவ சிலையை திறந்து வைத்த முதல்வருக்கு நன்றி. திமுகவுடன் ஜனநாயக சக்திகள் இணைந்து களத்தில் இறங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் இந்த விவகாரத்தில் பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கும் என காவல்துறை அஞ்சுகிறது. எனவே இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதை சரியானது பொருத்தமானது. ஆனால் தேசிய புலனாய்வு முகமை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை, மத்திய மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்தில் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கி இருப்பது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவுக்கு எதிராக பாஜக மேற்கொள்ளும் போராட்டம் குறித்து பேசிய அவர், தமிழ் மொழிக்காக பாஜக நடத்தும் போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது என விமர்சித்துள்ளார்.