தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்த நிலையில், மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்டமசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவிக்க, மறுபக்கம் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் வாக்கெடுப்பு மூலம் மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!(1/2)#TNUniversities #VC
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 25, 2022