பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்
ஆ.ராசா எடுத்துச் சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்? சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே? என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார்.
இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், இவரது கருத்தை பாஜகவினர் ஒருபக்கம் விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம் அவருக்கு ஆதரவாகவும் அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கே.பாலகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
மனு அநீதி சாஸ்திரத்திலும், சனாதன நூல்களிலும் காலம் காலமாக இடம்பெற்றுள்ள அநாகரீகமான கருத்துக்கள் குறித்து எந்த கோபமும் கொள்ளாதவர்கள், அதை எடுத்துக்காட்டி விமர்சித்த ஆ.ராசா மீது பாய்கிறார்கள். தாக்குதலைத் தூண்டிவிடுகிற பகிரங்க முயற்சிகளைச் செய்கிறார்கள்.
எத்தனையோ அறிஞர்களால் எடுத்துக் காட்டப்பட்டு, சாடப்பட்ட – இந்திய அரசமைப்புக்கு விரோதமான அந்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பலரும் கண்டித்துள்ளார்கள். ஆனால் அதையே ஆ.ராசா எடுத்துச் சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்? சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே?
இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.
– கே.பாலகிருஷ்ணன்
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) September 21, 2022