சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு..!
மகளிர் மீதான ஆண் ஆதிக்க சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி என ஆசிரியர் கீ.வீரமணி கருத்து.
வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துக்களில் தனது மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவர்சென்னையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.
இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, இல்லத்தரசிகள் பணியை கணவனின் பணியோடு ஒப்பிட முடியாது. இல்லத்தரசிகளின் பணி 24 மணி நேர பணி கணவரது பணி 8 மணிநேரம் மட்டும் தான். குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை பார்க்கின்றனர். மனைவி குடும்பத்தை கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி, கணவர் சம்பாதிக்கிறார் என்றால், மனைவி செய்யும் 24 மணிநேர உழைப்பும் சம்பாத்தியமே’ என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு; மகளிர் மீதான ஆண் ஆதிக்க சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.
இப்படிப்பட்ட சம உரிமை சிந்தனை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அவ்வப்போது முற்போக்குச் சிந்தனை கொண்ட நீதிபதிகள் மூலம் வெளியாவது நாட்டின் வருங்காலம் பற்றிய நம் கவலையைப் போக்குவதாக உள்ளது; நம்பிக்கை தருவதாக உள்ளது. முற்போக்குத் தீர்ப்புச் சொன்னவர் நீதிபதி ராமசாமி; அன்று பெரியார் ராமசாமி, இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி! எவ்வளவு எதிர்பாராத யதார்த்தப் பொருத்தம்!’ என தெரிவித்துள்ளார்.