“இது என்னுடைய அரசு அல்ல உங்களுடைய அரசு”…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், திட்டத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக (ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும், அதில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் அழைப்பு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கிராம முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை இரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திட்டத்தை இரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தமைக்காக கிராம மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” இது எனக்கான பாராட்டு விழா அல்ல. உங்களுக்கான பாராட்டு விழா. நான் வேறு, நீங்க வேறு என்று பிரிக்க விரும்பவில்லை. இது நமக்குக் கிடைத்த வெற்றி. நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ள உங்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். அரிட்டாப்பட்டி மக்களுக்கு என்றும் துணை நிற்போம்.
உங்களுடைய அன்பான முகத்தைப் பார்க்கும்போது, உங்களுடைய எழுச்சியான முகத்தைப் பார்க்கும்போது, இங்கே சிரித்த முகத்தோடு, புன்முறுவலோடு உங்களை பார்க்கின்றபோது உங்களோடு நீண்ட நேரம் பேசவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், மற்றொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப்பிறகு விமானத்தைப் பிடித்து சென்னைக்கு செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. நாளைக்கு வேறொரு மாவட்டத்திற்கு செல்லவேண்டும். அதனால், நீண்ட நேரம் பேசமுடியாது.
அதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம். இன்னும் ஒன்றரை வருடத்தில் தேர்தல் வரயிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியும். அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். இது கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தந்தை பெரியார் அவர்கள் வழியோடு நடைபெறக்கூடிய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. உங்கள் வீட்டுப் பிள்ளை; உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி என்பதை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு, என்றைக்குக்கும் நீங்கள் ஆதரவு தாருங்கள்.
நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போதே “இது என்னுடைய அரசு அல்ல உங்களுடைய அரசு” என்று சொல்லிருக்கிறேன். என்றும் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.