“சுயமரியாதை என்னும் பெயரில் தமிழ் மண் வளர்த்து வந்துள்ளது இதைத்தான்” – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

Default Image

சென்னை: “All Human, All Equal” என்பதை இந்த ஆண்டுக்கான உலக மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா.அவை அறிவித்துள்ளது.இந்நாளில், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1948 டிசம்பர் 10 ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் “மனித உரிமைகள் நாளாக” கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இந்நாளின் முக்கியக் கருத்தாகும்.மேலும்,எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும்,உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை வலியுறுத்துகிறது.இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில்,டிச.10 ஆம் தேதியான இன்று உலக மனித உரிமைகள் நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு,அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் பிறப்பு அடிப்படையிலான எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மனித உரிமைத் தத்துவமாகும். 1948-ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொது அவை ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோமோ,அதுபோல நாம் மற்றவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவமாகும்.

அவ்வகையில் “All Human, All Equal” என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா., அவை அறிவித்துள்ளது. இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் “யாவரும் கேளிர்” என்றும் தமிழ் நிலம் தாங்கி நின்றது.

இதைத்தான் ‘சுயமரியாதை’ எனும் பெயரில் இந்தத் தமிழ் மண் அரசியல் சமூக – பண்பாட்டுத் தளத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் இந்த மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம்”என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்