திருச்சி என்கவுண்டர்.! ரவுடி சுட்டுக்கொலை.! நடந்தது இதுதான்…

Komban Jegan - Trichy SP VarunKumar

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த கொம்பன் ஜகன் எனும் ரவுடி நேற்று சிறுகனூரை அடுத்த சாணமங்கலம் எனும் பகுதியில் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல் சார்பு ஆய்வாளர் வினோத் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார்.

இரண்டு குண்டுகள் பாய்ந்து கொம்பன் ஜெகன் உயிரிழந்த நிலையில், அவர் உயிரிழந்த அந்தப்பகுதியில் நாட்டு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு, நாட்டு வெடிகுண்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்கள் சந்தித்து விளக்கம் அளித்தார்.

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல்..!

அவர் கூறுகையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் கிராமத்தை அடுத்த சாணமங்கலம் எனும் காட்டுப்பகுதியில் பன்றிகள், ஆடுகள் மேய்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இரவு நேரங்களில் சில மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் ஆடுகளை கடத்தி வழிப்பறி செய்து வருவது தெரிந்துள்ளது. 

இதனால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த எஸ்.ஐ கருணாகரன் தலைமையில் தீபாவளி சமயத்தில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, காவல் சார்பு ஆய்வாளர் வினோத் உட்பட காவலர்கள் சாணமங்கலம் பகுதியில் சமூக விரோதிகளை கண்டறிய ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சமயம் நேற்று பகல் 12:00 மணி அளவில் சாணமங்கலம் பகுதியில் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கும் போது ஒரு நபரை பார்க்கின்றனர். பார்த்தவுடன் அவர்தான் கொம்பன் ஜெகன் A+ கேங்க்லீடர் என்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க முற்படுகையில், தற்காப்புக்காக ஜெகன் சார்பு ஆய்வாளர் வினோத்தை வெட்டியுள்ளார்.

இதன் காரணமாக தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 குண்டுகள் ஜெகன் மீது பாய்ந்தது உடனடியாக அவரை லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சார்பு ஆய்வாளர் வினோத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரவுடி கொம்பன் ஜெகன் மீது இதுவரை 53 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருந்துள்ளது.

ரவுடி கொம்பன் ஜெகனை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறையினர் செல்லவில்லை. சாணமங்கலம் பகுதியில் வழிப்பறி நடைபெறுவதாக வந்த தகவல் அடிப்படையில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டார்கள். அந்த சமயம் தான் ஜெகன் பிடிபட்டு உள்ளான். ஜெகன் சிறையில் இருந்த சமயத்திலும், வெளியில் இருந்த சமயத்திலும் பல்வேறு ரவுடிகளுடன் தொடர்பு கொண்டு பல்வேறு திட்டங்களை போட்டுள்ளான். பெரிய பெரிய ஆட்களை மிரட்டி உள்ளான் என தெரிகிறது. ஆனால் எங்களிடம் இதுவரை எந்த புகாரும் வரவில்லை என கொம்பன் ஜெகன் என்கவுண்டர் பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்