வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!
மாணவி வன்கொடுமை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது என அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அப்போது பதியப்பட்ட FIR விவரங்கள் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. அதில் மாணவி பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் மாணவி கொடுத்த புகார் (FIR) விவரம் எப்படி லீக்கானது? என்கிற கேள்வியை அரசியல் தலைவர்கள் பலரும் எழுப்பினார்கள். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து, FIR லீக்கானது குறித்து சென்னை ஆணையர் அருண் இதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.
செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது ” எப்ஐஆர் தொழில்நுட்ப ரீதியில் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.எனவே , அந்த நேரத்தில் ஆன்லைனில் FIR-ஐ பார்த்தவர்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம்அவர்கள் மூலம் வெளியே சென்றிருக்கலாம். FIR-லீக்கான உடனே வேகமாக அது முடக்கம் செய்யப்பட்டது. . FIR-ஐ வெளியிட்டது சட்டப்படி குற்றம் என்பதால் FIR-ஐ வெளியிட்டவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியிருந்தார்.
இந்த சூழலில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இந்த விவகாரத்தில் FIR லீக்கானதற்கு காரணமே தொழில்நுட்ப பிரச்சனை தான் என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மாண்பமை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என்பதும், காவல்துறை காரணம் அல்ல என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் இதில் எந்த தவறும் இல்லை எனத் தெளிவுபடுத்த உள்ளோம்” எனவும் தன்னுடைய பதிவின் மூலம் அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மாண்பமை…
— எஸ்.ரகுபதி (@regupathymla) December 28, 2024