இது கொடி பறக்குற நேரம்… விஜய் அரசியலில் அடுத்த அத்தியாயம்.! தவெக கொடியில் வாகை மலர்?
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை நாளை (ஆக.22ம் தேதி) அறிமுகப்படுத்துகிறார் விஜய்.
நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்யின் த.வெ.க கட்சி கொடி விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலை 7-க்குள் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், காலை 9.15க்கு கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த விழாவுக்கு செல்போனுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்பொழுது, விழாவுக்கான ஏற்பாடுகள் விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், விழா பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கொடியில் வாகை மலர் & லோகோ
விஜய்யின் தவெக கொடியில் “வாகை மலர்” இடம்பெற போவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது லோகோ ஒன்று இடம்பெற உள்ளதாககூறப்படுகிறது. அட ஆமாங்க… தவெக அறிக்கைகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், அதை மையமாக வைத்து லோகோ தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, வெற்றியை குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது லோகோ இடம்பெற உள்ளதாக வெளியான தகவலால் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், தவெக கொடியில் இடம்பெற போவது வெற்றியை குறிக்கும் வாகை மலரா? அல்லது சமத்துவத்தை போற்றும் வகையில் லோகோ இடம்பெற போகிறதா? என்று நாளை காலையில், தவெக கொடியை அறிமுகம் செய்ததும் தெரிந்து விடும், பொறுத்திருந்து பார்க்கலாம்.
தீவிர ஏற்பாடுகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை அறிமுகமாகவுள்ள நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் 500 நாற்காலிகள் போடப்பட்டு, பிரம்மாண்ட LED திரை அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் கொடியேற்றும் பகுதியில் கூட்டமாக யாரும் நிற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும், நாளை நடக்கவிருக்கும் அறிமுக விழாவிற்கு காலை 8 மணிக்கு நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு பனையூர் செல்லும் வரை உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி நீலாங்கரை மற்றும் கானாத்தூர் காவல் நிலையங்களில் த.வெ.க. நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.