இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி! நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்! – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Default Image

உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், இணைந்தே நல்லதோர் தமிழநாட்டை அமைப்போம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி பெரும் வெற்றியை ருசித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிமுக கோட்டைகள் என கூறப்படும் கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை திமுக வசம் ஆக்கியது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தேடி தந்த மக்களுக்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில், வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மகத்தான என்பதை விட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி.

இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தி.மு.கழக முன்னணியினர், கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அயராத உழைப்பாலும் பணியாலும்தான் இந்தச் சிறப்புமிகு வெற்றி சாத்தியமானது. எந்த தேர்தலாக இருந்தாலும் கூட்டணியினரின் ஒற்றுமை என்பது தேர்தல் உறவாக மட்டும் இல்லாமல், கொள்கை உறவாகவும், அதனையும் உள்ளடக்கிய பாச உணர்வாகவும் மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து வருவதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது.

தமிழ்நாட்டில் நம்முடைய அணி தொடர் வெற்றியைப் பெறுவதற்குக் காரணம் இந்த ஒற்றுமை உணர்வுதான். ‘நான்’ என்று சொல்லுவதை விட ‘நாம்’ என்று சொல்வதே நன்மை பயக்கும். அதனால்தான், இது எனது அரசு என்று சொல்லாமல், ‘நமது அரசு’ என்று சொல்லி வருகிறேன். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஓர் இனத்தின் அரசாக இருக்கும் என்பதை முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் சொல்லி வருகிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் அரசாக இருக்கும் என்றும், அனைத்து மக்களின் அரசாக இருக்கும் என்றும் சொல்லி வருகிறேன்.

அப்படித்தான் இந்த ஒன்பது மாத கால திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி. அத்தகைய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும். எங்களை நம்பி மக்கள் ஆட்சியைக் கொடுத்தார்கள், அத்தகைய மக்களின் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அதனை மக்களும் உணர்ந்து அங்கீகாரம் தந்துவிட்டார்கள் என்பதன் அடையாளம்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும். 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகள் எனக் கைப்பற்றியதன் மூலமாக தமிழ்நாட்டையே முழுமையாக வென்றுள்ளது கழகக் கூட்டணி.

எதிர்க்கட்சிகளை முழுமையாக மக்கள் நிராகரித்துள்ளார்கள். அவர்களது வாதங்களையும் நிராகரித்துள்ளார்கள். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும், கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நாங்கள் நிறைவேற்றவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பரப்புரை செய்யப்பட்டது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 70 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்பதைப் பட்டியல் போட்டு நான் விளக்கம் அளித்தேன்.

மற்ற வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதி அளித்தேன். தேர்தல் அறிக்கை என்பது ஐந்து ஆண்டுத் திட்டமாகும். அது எதையும் புரிந்துகொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. கழக அரசுக்கும் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் அவதூறுகள் மூலமாகவும், பழிகளின் மூலமாகவும் மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள். ஆனால் மக்கள் எந்நாளும் உதயசூரியனைத் தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என்பதைக் காட்டி விட்டார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், இந்த ஒன்பது மாத காலத்தில் கழகத்தின் செல்வாக்கு மக்களிடையே மிக அதிகளவில் பெருகிவிட்டதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகமாக அதிகமாக எங்களுக்கான பொறுப்பும் கடமையும் அதிகமாகிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. வெற்றி பெற்றவர்கள் அதனைச் சிறப்பாகச் செய்வார்கள். அதனை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவர்கள் அனைவரும் பணியாற்றுவார்கள். அதனையும் நான் கண்காணிப்பேன். நாங்கள் நிறைவேற்றும் திட்டங்கள் முழுமையாக மக்களை வந்தடைகிறதா என்பதையும் நேரடியாக வந்து நான் பார்வையிடுவேன். உத்தரவு போடுபவனாக மட்டுமல்ல, கண்காணித்துக் கவனிப்பவனாகவும் நான் இருப்பேன்.

வெற்றியை வழங்கிய மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நிச்சயம் வருவேன்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘திராவிட மாடல்’ ஆட்சியை முன்னிலும் திறம்படக் கொண்டு செலுத்த ஊக்கமளித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy