இது துரோணாச்சாரியார் காலம் அல்ல, ஏகலைவனின் காலம்! – முதலமைச்சர் சொன்ன குட்டி ஸ்டோரி!
நாகை மாவட்டத்தில் காலை சிற்றுண்டி விரிவாக திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இதுபோன்று தமிழக முழுவதும் அனைத்து தொடக்க பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி விரிவாக்கம் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே முதல் கட்டமாக 1,500 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. இன்று தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதில் ஒரு பகுதியாக திருகுவளையில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர், காலை சிற்றுண்டி விரிவாக திட்டத்தில் 31,008 அரசு பள்ளிகளில் சுமார் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பர், திமுக அரசு உயிர் கொடுத்துள்ளது. காலை உணவு திட்டத்தால் என் மனம் நிறைந்து மகிழ்கிறது. கலைஞர் படித்த பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். எந்த காரணமும் கல்வி கற்க தடையாக இருக்கக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.
அண்ணா, பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் தடத்தை பின்பற்றி நடக்கிறேன். மதிய உணவு திட்டத்தை ஊட்டச்சத்து திட்டமாக மாறியவர் கலைஞர். காலை உணவு திட்டத்திற்கு அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல, நிதி முதலீடு. உதவ யாரும் இல்லை கலங்கும் மக்களுக்கு திமுக அரசு உறுதுணையாக உள்ளது.
பசி இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது. ரத்தசோகை குறைபாட்டை நீக்க வேண்டும்.மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிக்க வேண்டும். வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது தான் காலை உணவுத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றார். மேலும், இது துரோணாச்சாரியார் காலம் அல்ல, ஏகலைவனின் காலம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ஒரு குட்டி கதையும் கூறினார்.
அவர் கூறுகையில், அந்த காலத்தில் அரச குலத்தோர் மட்டுமே கற்றுக்கொள்ளலாம் என்று இருந்த வில் வித்தையை, வேடர் குலத்தை சேர்ந்த ஏகலைவன் கற்றுக் கொண்டதை பார்த்து, கட்ட விரலை காணிக்கையாக கேட்ட துரோணாச்சாரியார் போன்ற ஆசியர்கள்தான் இருந்தார்கள். சமூகநீதி நிலைநாட்டக் கூடிய காலகட்டத்தில் யாராவது ‘கட்டை விரலை காணிக்கையாக கேட்டால் அவர்களது பட்டையை உரி’ என்று சொல்லி எச்சரித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என தெரிவித்தார்.