இது கடைசி வெள்ளை அறிக்கை இல்லை.. இதுதான் முதல் அறிக்கை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. தமிழக்தில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பே வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் போக்குவரத்துறையில் ரூ.1,99,527 கோடி கடன் உள்ளது. 2019-20-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1.83 சதவீதமாகவே இருந்தது. 2008-09 ஆண்டில் 13.35%-ஆக இருந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21-ம் ஆண்டில் 8.7% ஆக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிந்துள்ளது. கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய். கடனுக்கு வட்டி கட்ட கடன் வாங்க வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. வரியில் மாற்றம் தேவை என்று கூறி, குடிசைக்கும், அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஒரே மாதிரி குடிநீர் வரி இருப்பதை மாற்ற வேண்டியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட சரிவுகள் 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும்.
இதுபோன்று கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடைசி வெள்ளை அறிக்கை இல்லை, இதுதான் முதல் வெள்ளை அறிக்கை, இனி வரும் காலங்களில் துறைவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். வெள்ளை அறிக்கை தேவைப்படாத அளவிற்கு திமுக அரசு செயல்படும்.
மேலும், பல்வேறு துறைகளில் முழுமையான தரவுகள் இல்லை என்று கூறி, அரசாங்கத்தின் அனைத்து தரவுகளையும் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.