இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல! கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு முரசொலி கண்டனம்!
கே.பாலகிருஷ்ணன் பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், போராட்டம் நடத்தினால் காவல்துறை வழக்குப்பதிவு செய்வதாகவும் சரமாரியான குற்றசாட்டை கே.பாலகிருஷ்ணன் நேரடியாகவே முன்வைத்தார். இது பற்றி அவர் பேசும்போது ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலம் என்றாலே காவல்துறை வழக்குபோடுகிறது.
நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கேட்கிறேன், ‘தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை (எமெர்ஜென்சி) பிரகடனப்படுத்திவிட்டீர்களா என்ன?’ எப்படி இந்த காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது? தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்தக்கூடாதா? மக்கள் இயக்கம் நடத்த கூடாதா? பாதிக்கப்படுகிற மனிதன் தனது உரிமைக்காக போராட கூடாதா? ” என விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து, கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு திமுக நாளேடு முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, ” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார்? முதலமைச்சரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்?
எப்போதும் நட்போடும், எந்த நேரத்திலும் தோழமையுடனும் பொது இடங்கள் அனைத்திலும் மதிப்பளித்தும், உரிய வகையில் அனைத்துக்கும் பதிலளித்தும் செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை எப்போதும் சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நெருக்கடியும் நிர்பந்தமும் கே.பி.க்கு இருக்கலாம். ஆனால் தோழமைக் கட்சிகளிடம் சிறு விண்ணப்பம் வந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்கும் இயக்கம்தான் தி.மு.கழகம் என்பதை வஞ்சம் இல்லாத தோழர்கள் உணர்வார்கள்.
கூட்டணிக் கட்சி என்பதற்காக போராட்டமே நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் போராட்டமும் நடத்திவிட்டு, போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல. மனச்சாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?
எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு எடுத்தெறிந்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுகளும் மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையைச் சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.