‘இது முதன்முறை அல்ல’- தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிய ஜோதிமணி எம்.பி..!
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுக்க சென்ற கரூர் மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. அது குறித்து மாணவி மரணமடைந்த அன்றே அவரது தாயார் மற்றும் உறவினர்கள் புகார் அளிக்க சென்ற நேரத்தில் வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது.
முதலில் புகார் கொடுக்கச் சென்று ஆய்வாளருக்காக காத்திருந்த மாணவியின் உறவினர்களை, குடிபோதையில் இருந்த ஆய்வாளர் கண்ணதாசன் ஏன் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று அடித்திருக்கிறார். புகாரை பெறாமல் அலட்சியத்துடன் செயல்பட்டதுடன், நேரில் சென்று விசாரிக்காமல் இரவு நேரத்தில் மாணவியின் தாயாரை காவல்நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார்.
இறந்த மாணவியின் தாயார் காவல்நிலையம் வந்த பிறகு அவர் பற்றியும் மாணவி பற்றியும் தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் அவர்களின் மாண்பை கலங்கப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். கணவரையும் குழந்தையையும் இழந்த ஒரு தாயிடம் அவருடைய நடத்தையை சந்தேகிக்கும் வண்ணம் பேசியிருக்கிறார். இப்படியொரு கேவலமான பேச்சை பொறுக்க முடியாமல், பெண்ணின் தாயாரும் அவரது தோழியும் காவல் நிலையத்தில் கதறி அழுதிருக்கின்றனர்.
இது குறித்து கேள்வி எழுப்பிய உடன்சென்ற கார்த்திக் என்பவரை தாக்கியிருக்கிறார். பின்னர் லாக்கப்பில் வைத்து இரவு முழுவதும் அடித்திருக்கிறார். மாணவியின் மாமா லிஜு என்பவரை கன்னத்தில் அறைந்திருக்கிறார். மேலும் இரண்டு பெண்கள் உட்பட அனைவரையும் விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்திருக்கிறார். புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை குற்றவாளிகளாக ஜோடிக்க முற்பட்டுள்ளார். ஆய்வாளரின் இத்தகைய நடவடிக்கையை ஜனநாயக நாட்டில் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆய்வாளர் மிருகத்தனமாக நடந்துகொண்டிருப்பது குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டாரா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.
இவ்வாறு நடந்து கொண்ட ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதோ தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோ போதுமானதல்ல. தமிழகத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் அதிகரித்துவரும் நிலையில், நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை இவ்வாறு நடந்துகொள்வது, மக்களுக்கு காவல்துறை மீது இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும், எனவே, ஆய்வாளர் கண்ணதாசன்மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவரை துறைரீதியான விசாரணைக்கு உட்படுத்தி கைது செய்ய வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.
தன் மகளுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக புகார் கொடுக்க சென்ற தாயாரையும் உறவினர்களையும் குற்றவாளிகள் போல் காவல் ஆய்வாளர் நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கச்செல்லும் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எளியமக்களுக்கும் இவ்வாறு நடைபெறுவது முதன்முறை அல்ல என்பது வேதனை அளிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் காவல்துறையில் தொடர்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு புகார் கொடுக்க முன்வருவார்கள்? பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளை போல் நடத்தும் இம்மாதிரியான மனிதாபிமானமற்ற சூழலே பாதிக்கப்பட்ட பெண்களை தற்கொலைக்கு தள்ளுகிறது. எனவே, பாதிக்கப்பட்டோரை மாண்புடன் அணுகும்விதம் குறித்த புரிதலை ஏற்படுத்த காவல்துறையினருக்கு பயிற்சி முகாம்கள் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என எழுதியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுக்க சென்ற கரூர் மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு நான் எழுதிய கடிதம். pic.twitter.com/cQzYfVOR2j
— Jothimani (@jothims) November 21, 2021