“இது மணிப்பூர் அல்ல… தமிழ்நாடு”- அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : அதிமுக – பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், நேற்றைய தினம் பாஜக தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு’ இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்’ ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை ஆண்டது பாஜக என்று விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட், மும்மொழிக்கொள்கை, வக்பு திருத்த சட்டம், தொகுதி மறுவரையறை போன்றவை அதிமுக – பாஜக கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பாஜக தலைமையை நோக்கி அதிமுக ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்
2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.