“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!
மாநாட்டை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஒப்பந்ததாரர் விஸ்வநாதன் ஆகியோருக்கு தவெக தலைவர் பரிசளித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாடு பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்பதால் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுப் பலத்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு திருவிழா போல நடைபெற்றது என்றே சொல்லலாம்.
இந்த மாநாடு நடத்துவதற்கு அந்த பகுதியில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் சிலர் அனுமதி கேட்கப்பட்டு அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு தான் மாநாடும் நடைபெற்றது. எனவே, மாநாடு நடத்துவதற்கு இடம் தந்து உதவிய அவர்களுக்கு எதாவது நன்றி தெரிவிக்கும் வகையில் கொடுக்கவேண்டும் என்பதற்காக விஜய் நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயி ஒருவருக்குப் பசுமாடு, கன்றுக்குட்டியை தன்னுடைய நிர்வாகிகள் மூலம் வழங்கியிருந்தார்.
அதைப்போல, தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் விஜய் இன்று விருந்து வழங்குகிறார் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இன்று பலரும் விஜய் வைக்கும் விருந்து சாப்பிட 300 பேர் வருகை தந்திருந்தார்கள். அவர்களுக்குச் சைவ உணவு சமைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் தன்னுடைய கையால் பரிமாறி விருந்து வழங்கினார்.
விருந்து சாப்பிட்டு முடித்த பிறகு தாம்பூலம் தட்டில் வேட்டி சட்டைகள் மற்றும் சேலைகள் பழங்கள் வைத்துக் கொடுத்து தன்னுடைய நன்றியை விஜய் நிலம் வழங்கியவர்களுக்குத் தெரிவித்தார். அத்துடன் இரண்டு பேருக்கு விஜய் தங்க மோதிரத்தையும் பரிசாக வழங்கினார்.
யாருக்கெல்லாம் என்றால் மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகி 2 பேருக்குத் தான் விஜய் தங்கம் மோதிரம் பரிசளித்துள்ளார். மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஸ்வநாதனுக்கு நினைவுப்பரிசாக வழங்கி கௌரவித்தார்.