இது அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே – கே.பாலகிருஷ்ணன்
சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், நேற்று தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி அமைதியான முறையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினரே வன்முறை ஏவியதும், குருவிகளை சுடுவதைப் போல மக்களை சுட்டுக் கொன்று குவித்ததையும் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை ஆணித்தரமாக வெளிக் கொண்டுவந்துள்ளது.
இந்த வழக்கில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளோடு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், வேதாந்தா நிறுவனமும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, அமைப்புச் செயலாளர் திரு சி.வி.சண்முகம் எம்.பி. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை அவதூறுகளை அள்ளி வீசி உண்மையைப் புதைத்துவிடலாம் என்ற அற்ப முயற்சியே தவிர வேறல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்கு பொறுப்பான அனைவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். முன்னாள் முதலமைச்சர், வேதாந்தா நிறுவனம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் விசாரணையிலிருந்து தப்பிவிடக் கூடாது.
அமைதியாக போராடிய மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுத்திருக்கிற அரசு பயங்கரவாத நடவடிக்கை தமிழகத்தில் எதிர்காலத்தில் எங்கேயும் தலையெடுக்காமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு படிப்பினையாக அமைந்திட வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அழுத்தமான வற்புறுத்தலாகும்.’ என தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் படுகொலைகள்:
சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை
அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே… pic.twitter.com/dQiWXf6Dc4— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) November 5, 2022