இது ஒரு நாடு..! இது ஒரு தேர்வு..! சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்…! – கமலஹாசன்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் நீட் தேர்வு தொடர்பாக ட்வீட்.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தனுஷ் தற்கொலை
இந்த நீட் நுழைவு தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையிலும், இந்த தேர்வு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், இம்முறை மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராக இருந்தார். இதனையடுத்து அவர் நீட் தேர்வு பயத்தால், செப்டம்பர் 12-ஆம் தேதி இரவு ஒரு மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கனிமொழி தற்கொலை
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறிவந்த கனிமொழி தனது மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்திலோ அல்லது தோல்வி பயத்திலோ தற்கொலை செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கமலஹாசன் காட்டம்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் நீட் தேர்வு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’ என பதிவிட்டுள்ளார்.