100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்கு இந்த தீபாவளி, கருப்பு தீபாவளி.! காங்கிரஸ் எம்பி குற்றசாட்டு.!
இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கிராமபுற மக்களுக்கு உடலுழைப்பு வேலை திட்டம் தொடர்ந்து 100 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டமானது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தான் தமிழக்த்தில் ஊழியர்களுக்கு தினசரி சம்பளம் 281 ரூபாயில் இருந்து 294 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதே போல மாற மாநிலங்களில் குறிப்பிட்ட தொகை உயர்த்தப்பட்டது. அதே வேளையில், கடந்த 2022 – 2023 காலகட்டத்தில் 89 ஆயிரம் கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டு இருந்த 100 நாள் வேலை திட்ட நிதி நடப்பாண்டில் 60 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த 100 நாள் வேலை திட்டம் குறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அதில் வரும் தீபாவளி 100 வேலை திட்ட ஊழியர்களுக்கு கருப்பு தினம் என கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட விருதுநகர் எம். பி மாணிக்கம் தாகூர், 100 நாள் வேலை தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தினை நிறுத்துவதற்கான சதி வேலைகளை பாஜக அரசு செய்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் முதல் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. சுமார் 91 லட்சம் தாய்மார்களுக்கு 1,500 கோடி ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன் ஊதியம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த தீபாவளி அவர்களுக்கு கருப்பு தீபாவளியாக மாற உள்ளது, இதற்கு முழு காரணமும் பிரதமர் மோடி தான் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.