#Justnow:இலவசம்…வண்டல் மண் எடுக்க இந்த சான்றிதழ் தேவையில்லை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!
தமிழகத்தில் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்து பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள ஏரிகளிலும்,குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து,விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில்,விதி 12(2)-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
- அதன்படி,நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும் புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும் ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் பெருமக்கள்,சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
- மேலும்,ஏரி மற்றும் குளங்கள் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இலவசமாக மண் எடுத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் வேளாண் பெருமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிட வேண்டும்.
- இந்நேர்வில்,20 நாட்களுக்கு மிகாமல்,ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும்.
- விவசாயிகள் வண்டல் மண்ணை எடுக்க சுற்றுச்சூழல் துறை சான்றிதழ் பெற தேவையில்லை.
- சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களுக்கு இவ்விதிகள் பொருந்தும்.