தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

தமிழக மக்களுக்கு மத்திய அரசு மீண்டும் துரோகம் செய்துவிட்டது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Budget session udhayanidhi stalin

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.இதனையடுத்து, தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்த நிலையில்,  அவர்களை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் ” தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. மத்திய அரசும் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. மெட்ரோ ரயில் திட்டமாக இருக்கட்டும், சாலை பணிகள் திட்டமாக இருக்கட்டும் எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இதற்கு எல்லாம் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

எங்கு தேர்தல் நடைபெறுகிறதோ. எங்கு அவர்களுடைய கூட்டணி கட்சி ஆட்சி நடக்கிறதோ அதற்கு மட்டும் தனியாக நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். தமிழ் நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ” ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததும், தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டை கண்டுகொள்ளாமல், நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவும் தேர்தல் கணக்குகளோடும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்” எனவும் காட்டத்துடன் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்