குவைத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் தமிழகம் வருகை.! காவலர் உட்பட 4 பேர் கைது.!
குவைத்தில் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் இன்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். கிளீனிங் வேலை என்று கூறிவிட்டு, ஒட்டகம் மேய்க்க சொன்னதாக அவர் தன் குடும்பத்தாரிடம் வேதனையுடன் கூறியுள்ளார்.
அதன் பின்னர் கடந்த 7ஆம் தேதி முதல் அவர் போன் ஆஃப் ஆகியுள்ளது. நேற்று முன்தினம் அவர் குவைத் நாட்டில் சுட்டு கொல்லப்பட்டதாக அங்குள்ள ஏஜென்ட் மூலம் தகவல் முத்துக்குமரன் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால், மிகுந்த மனவேதனையில் இருந்த அவரது குடும்பத்தார், அவரது உடலையாவது சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியான தக்வலின் படி, குவைத் நாட்டில் முத்துக்குமரன் கொல்லப்பட்டது தொடர்பாக குவைத் நாட்டு காவலர், ஆந்திராவை சேர்ந்த ஏஜென்ட் உட்பட 4 பேர் குவைத் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இன்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு முத்துக்குமரன் உடல் வரும் என குவைத் நாட்டில் இருந்து அவரது நண்பர் கூறியுள்ளார். மேலும், இன்று காலை 10 மணி முதல் இந்திய தூதரகத்தில் முத்துக்குமரன் உடல் இந்தியர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.