பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டால் கூண்டோடு சஸ்பெண்ட்.! அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.!
திருவண்ணாமலையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டால், அதற்கு அனுமதி கொடுத்த அணைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று தனது ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதில் பேசுகையில், ‘ திருவண்ணமலை ஓர் ஆன்மீக நகரம். நாள் தோறும் இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்க மாவட்ட நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும், அந்த அழகை பேனர்கள் கெடுத்து விடுகின்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனுமதி பெற்று பல நாட்களாகவும், அனுமதி பெறாமல் ஒரு சில நாட்களும் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
இப்படி அனுமதியின்றி பேனர் வைத்திருப்பதை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு குழு உருவாக்கப்படும். அது போல, அனுமதி பெற்ற வைக்கப்பட்ட பெயர்களால் விபத்து ஏற்பட்டால், அதற்கு அனுமதி கொடுத்தவர்கள் அனைவரும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
மேலும் , சஸ்பெண்ட் செய்யப்படுபவர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.