வள்ளுவருக்கு காவி உடை., மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஆளுநர் மாளிகை!
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் கருத்தரங்கிற்காக வெளியிடப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் புகைப்படம் காவி உடையில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். திருவள்ளுவர், கவிஞர் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோர் பற்றி இந்த கருத்தரங்கில் பலர் உரையாற்ற உள்ளனர்.
இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழிலில் தான், சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது. விழாவுக்கான அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு முனிவர் போன்று காவி உடை அணிவிட்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அவரை மத அடையாளமாக முன்னிறுத்தும் வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து வருகிறார் என்றும், இந்துத்துவா அரசியலை பிரச்சாரப்படுத்தும் பணியில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி தனது பதவியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் கலகத்தை உருவாக்க வேண்டும் என செய்து வருகிறார். இதனை அவர் தெரிந்து தான் செய்து வருகிறார். ஓர் பதட்டமான சூழலை உருவாக்க வேண்டும் என்று தான் மீண்டும் மீண்டும் என்று செய்து வருகிறார். இதனை அவர் நிறுத்த மாட்டார். பாஜக கொள்கைகளை இங்கே பரப்ப வேண்டும் என அவர் நினைக்கிறார். திருவள்ளுவரை ஒரு மதத்திற்குள் அடைக்க முயற்சி செய்து வருகிறார். இது தவறான முயற்சி. ஆளுநரின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது . மேலும், திருவள்ளுவர் தின அழைப்பிதழிலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.