திருப்போரூர் துப்பாக்கி சூடு விவகாரம் -இதுவரை 12 பேர் கைது
திருப்போரூர் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதயவர்மனை தேடி வந்தனர் . மேலும், இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது . அதன் அடிப்படையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.எல்.ஏ இதயவர்மனனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . அவர் எம்.எல்.ஏ என்பதால், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தர வதனம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக எம்எல்ஏ தரப்பில் 11 பேரும் ,அவருக்கு எதிராக புகார் அளித்தவர் தரப்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.