“நானும் பிரபாகரனை சந்தித்து இருக்கிறேன்.. சீமான் அவரை இழிவுபடுத்துகிறார்” திருமா பரபரப்பு பேட்டி!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், திராவிட இயக்கங்கள் மற்றும் பெரியார் பற்றி அவதூறாக பேசியதில்லை என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார் . இதற்கு பெரியாரிய இயக்கங்கள் , திமுக தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். சீமான் வீடு முன்பு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார், பெரியார் சமூக நீதிக்கு என்ன செய்தார்? பெண் விடுதலைக்கு என்ன செய்தார் என பல்வேறு விமர்சனங்களை சீமான் முன்வைத்து வருகிறார். மேலும், அண்மையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை தலைவராக பார்க்கப்படும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனோடு சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்ற செய்திகளும் பரவிய நிலையில் அதற்கும் சீமான் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இப்படியாக பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் சீமான் மீது எழ, சீமான் பற்றியும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் விசிக தலைவர் திருமாவளவன் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில், ” சீமான் பேசுவது குதர்க்கமானது. அதற்கு பதில் சொல்ல முடியாது. அதில் கேள்வி எழுப்பக்கூட முடியாது. சீமான் வெறும் கவன ஈர்ப்புக்காக மட்டுமே பேசுகிறார். தன்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என பேசி வருகிறார்.
சீமான் பேசுவது சனாதன கும்பலுக்கு பாதை அமைத்து கொடுத்து விடும். சீமானுக்கு அது பயன்படுகிறதோ இல்லையோ, தமிழ் மண்ணில் சனாதன கும்பல் அரசியல் செய்ய பாதை அமைத்து கொடுத்துவிடும். இதனை சீமான் அறிந்து செய்கிறாரா? அறியாமல் செய்கிறாரா? என தெரியவில்லை. சீமான் தமிழ் தேசியம் பேசுவது இங்கு பிரச்சனை இல்லை. ஆனால் அது மதவாத சக்திகளுக்கு இங்கே அடித்தளம் அமைத்து கொடுத்துவிடும் பாதை என்பது தான் பிரச்சனை.
தந்தை பெரியாரின் தியாகம் என்பது ஒப்புயர் அற்றது. நான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சென்னையிலும் சந்தித்து இருக்கிறேன். இலங்கையிலும் 2 முறை சந்தித்து இருக்கிறேன். சில நிமிடங்கள் அல்ல மணி கணக்கில் தனிமையில் அமர்ந்து பேசியிருக்கிறேன். அவர் தமிழ்நாடு அரசியலை பற்றி விரிவாக பேசியுள்ளார்.
ஒரு போதும் அவர் திராவிட இயக்கங்களை பற்றியோ, பெரியாரை பற்றியோ குறை சொன்னதில்லை. இந்திய அரசை கூட அவர் விமர்சிக்கவில்லை. இந்திய அரசின் துணை இல்லாமல் தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க முடியாது என்ற தெளிவு பிரபாகரன் அவர்களிடம் இருந்தது. சீமான் பேசுவது மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவது போல உள்ளது. ” என திருமாவளவன் பேசியுள்ளார்.