ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை – தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு தடை செய்த தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி.
தமிழ்நாடும் முழுவதும் பல மாவட்டங்களில் அக்.2-ஆம் தேதி நடக்க இருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழக காவல்துறை அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. அக்.2-ஆம் தேதி சில அமைப்புகள் பேரணி நடத்த அனுமதி கோரியுள்ளதாலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மனித சங்கிலி பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் என எந்த அமைப்புகளும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக ரோந்து முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழலில் எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்தது. தமிழக அரசின் முடிவிற்கும், காவல்துறைக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அக்டோபர்-02 அன்று மதவெறி ஃபாசிச ஆர்எஸ்எஸ் நடத்துவதாக இருந்த அணிவகுப்பைத் தடை செய்த தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கும் விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு ஏராளமான அரசியல் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்த தடை ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்படி அனுமதி பெற்று பேரணியை நடத்துவோம். காவல்துறையிடம் இதுகுறித்து மனு கொடுக்க உள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தரக்கூடாது என விசிக சார்பில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், அக்.2-ஆம் தேதி சமூக ஒற்றுமை மனித சங்கிலி பேரணி நடத்தவும் திட்டமிட்டுருந்தார்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.