த.வெ.க கொடி அறிமுகம்.! திருமா, செல்வப்பெருந்தகை, சீமான் கூறியதென்ன.?
சென்னை : தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம் மற்றும் விஜய் அரசியல் வருகை குறித்தும் செல்வப்பெருந்தகை, திருமாவளவன், சீமான் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் தற்போது தீவிர கள அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளார். இன்று தனது கட்சிக் கொடியை சென்னை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றியுள்ளார். மேலும், கட்சி பாடல் , கட்சி உறுதிமொழி ஆகியவற்றையும் தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்தார்.
திருமாவளவன் :
விஜய் அரசியல் வருகை குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறுகையில், ” விஜய் அரசியல் வருகையை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். மக்கள் தொண்டு செய்வதற்காக தனது கலைத்துறை பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வருகிறார். திரைத்துறையில் அவரது செல்வாக்கு இன்னும் இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் அவரால் சினிமாவில் நீடிக்க முடியும். புகழின் உச்சத்தில் இருக்கும்போது அதனை விட்டு அரசியல் களத்திற்கு வருகிறார் என்பது, சமூக பொறுப்புணர்வோடு பொதுவாழ்வுக்கு வருகிறார் என்றுதான் நான் பெரிதும் நம்புகிறேன். அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை :
விஜய் அரசியல் வருகை பற்றி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ” இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தங்கள் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தலாம். தவெக தலைவர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விஜயின் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என தெரிவித்துள்ளார்.
சீமான் :
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் அவர்கள் இலட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.