விஜயுடன் சங்கடம் இல்லை., ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் ‘நச்’ பதில்!

ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து விசிக உயர்மட்ட குழு ஆலோசனையில் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Aadhav Arjuna - Thirumavalavan

மதுரை :  நேற்று முன்தினம் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’  எனும் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் , விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆதவ் அர்ஜுனா பேசிய மன்னராட்சி கருத்துக்களும், விஜய் பேசிய கூட்டணி பிரஷர் கருத்துக்களும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் முன்னரே விளக்கம் அளித்துவிட்டார். தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்தால் அதற்கு நான் இணங்குபவனும் இல்லை என கூறினார். மேலும், ஆதவ் அர்ஜுனா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து அதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ” திமுக கூட்டணி கட்டுக்கோப்பை சீர்குழைக்க சதி நடைபெற்று வருகிறது. அதற்கு ஒரு கருவியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். கட்சியில் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா கட்சி  செயல்பாட்டை மீறி செயல்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. இதனை விசாரிக்க தலைவர், பொதுச்செயலாளர் அடங்கிய உயர்மட்ட குழு உரிய விசாரணை நடத்தி புகாரில் முகாந்திரம் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

தலித் சமூகத்தை முன்னிறுத்தி விசிக கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தலித் அல்லாத நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் போடப்பட்டு இருந்தது. அதன்படி பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய கூட்டணி சூழல் அமைக்க வேண்டிய நிலை இப்பொது இல்லை. யாரும் அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் நிலையில் நான் இல்லை. ஆதவ் அர்ஜுனா அழைப்புக்கு இணங்கி இருந்தால் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.  திமுக அழுத்தம் கொடுத்திருந்தால் நான் ஆரம்பத்திலேயே மறுத்து இருக்க வேண்டும்.

இது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கடந்த 6ஆம் தேதி காலையில் நான் அறிக்கை வெளியிட்டேன் என்றாலும், தவெக மாநாட்டில் திமுகவை தனது முதன்மை எதிரி என்று விஜய் கூறிய பிறகு நான் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதை முடிவு செய்துவிட்டேன்.  விஜயோடு எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஒரே நிகழ்ச்சில் பங்கேற்பதில் எந்த சங்கடமும் இல்லை.

நான் விஜயோடு அரசியல் இல்லாமல் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அதனை வைத்து சிலர் தமிழக அரசியலில் சூதாட்டம் ஆடுவார்கள். இதனை விகடன் பதிப்பகத்திடம் நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். இது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. தொலைநோக்கு எண்ணத்தோடு எடுத்த முடிவு. கூட்டணி நலன் கருதி எடுத்த முடிவு. ” என திருமாவளவன் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்