“விஜய் பேச்சை கண்டும் காணாமல் போயிருக்கலாம், ஆனால்.?” திருமாவளவன் விளக்கம்.!

விஜய் பேச்சை கண்டும் காணாமல் போயிருக்கலாம், ஆனால் வழியில் கால் நீட்டி வம்பிழுக்கும் சிலருக்கு பத்தி சொல்ல வேண்டியதால் அவர் பற்றி பேசினேன் என திருமாவளவன் கூறினார்.

TVK Vijay - VCK Leader Thirumavalavan

சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக – அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியான போது திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கள், தவெக முதல் மாநாட்டில் விஜய் இதே கருத்தை கூறுகையில், தவெக – விசிக கூட்டணி பேச்சுக்கள் என விசிக கூட்டணி பற்றி அவ்வப்போது தமிழக அரசியலில் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த பல்வேறு யூகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ஓர் விளக்க அறிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாடு அரசியலில் நாம் குறிவைக்கப்பட்டுள்ளோம். அதற்கு காரணம், நாம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாகும். இந்த கூட்டணியை முறியடிக்க திட்டமிடுவோர், நம்மை ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

திமுகவை பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பை கண்டு எரிச்சல் அடைபவர்கள், நம்மை வெறுப்பவர்கள், கட்சி அடையாளம் இல்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த யூகங்களை கூறி வருகின்றனர். 2019 முதல் நம்மை சீண்டும் நடவடிக்கைகால் தொடர்ந்து வருகிறது. அதற்கு பலியாகாமல், நாம் தொடர்ந்து அனைத்து சதிகளையும் முறியடித்து வருகிறோம்.

2017-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டணி 2019, 2021, 2024 என தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. இதனை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, இந்த கூட்டணியை சிதறடித்து வெற்றியை தடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

மது ஒழிப்பு மாநாட்டை குறிப்பிட்டு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயன்றார்கள். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கும் எனும் கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, ஒரு கருவியாக கையில் எடுத்தனர். இப்போதுதான் இதனை பேசுவது போல அவர்கள் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். தவெக தலைவர் விஜயுடன் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்க போகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். விஜய் எதற்காக மேடையில் அப்படியே அறிவித்தார் என நமக்கு தெரியாது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விடுதலை சிறுத்தைகள் கொள்கைதானே தவிர, நம்மை குறி வைத்துதான் நடிகர் விஜய் பேசியுள்ளார் என்ற யூகத்தில் அரசியல் களத்தில் பல உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அது தவிர்க்க இயலாதது. இதனையே ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டு நம் கொள்கை பகைவர்கள், அரசியல் போட்டியாளர்கள் என பலரும் கூறவே, அதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டியதாயிற்று.

விஜய் உரையை கண்டும் காணாமல் போயிருக்கலாம். ஆனால், வழியில் காலை நீட்டி வம்பிழுப்பவர்களை எப்படி கடந்துபோவது? அவர்களுக்கு விடை சொல்ல வேண்டும் என்பதை விட, நமது கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவாக பேச வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்று.

டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளன்று, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவில் அரசியல் சாயம் பூத சிலர் முயற்சிக்கின்றனர். இந்த விழா ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, இந்து ராம், ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. பின்னர், அக்டோபர் 10ஆம் தேதி, எனக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி, நடிகர் விஜய்  கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டது. இப்படியான சமயத்தில் தான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் விதமாக  தவெக -விசிக கூட்டணி பற்றி மீண்டும் அரசியல் களத்தில் பேசப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம்பெற்று, தொடர் வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கும் போது, இப்போதைக்கு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும், திமுக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியை முறித்துக்கொள்ள  வேண்டும் என்ற நிலை ஏற்படவில்லை. சில நயவஞ்சக சக்தியினரின் தூண்டலுக்கு நாம் இறையாகி விடக்கூடாது. தோழமைக் கட்சியினர்களோடு இணைந்து நம் உருவாக்கிய கூட்டணியில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் ” என விசிகவின் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்