விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…
தவெக எதிர்கட்சி எனும் கருத்து விவகாரத்தில் அதிமுக தான் பதில் கூற வேண்டும் என திருமாவளவன் கூறினார்.

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய், தவெக முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என பலர் கலந்து கொண்டனர். பிரபல தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டிற்கு தமிழக வெற்றிக் கழகம் தான் எதிர்க்கட்சி எனவும், விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பேசியிருந்தார். இதுகுறித்து இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், ” அவர்கள் (ஆதவ் அர்ஜுனா) கருத்தை அதிமுகவுக்கு இவர்கள் விடுகின்றன சவாலாக தான் நான் கருதுகிறேன். அதிமுக எதிர்கட்சியா இல்லையா என்பதை பொதுமக்களிடையே எழுப்பியுள்ளனர். அதற்கு அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும்.” என கூறினார். ஆதவ் அர்ஜுனா இதற்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்துள்ளார் என்பதும், தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போதும் திருமாவளவனிடம் ஆசி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.