திடீர் ஐ.டி. ரெய்டு! உளவியல் ரீதியாக நெருக்கடி.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

thirumavalavan

Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது.

சிதம்பரத்தில் தனி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு வாரமாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் திடீரென வருமான வரித்துறையின் நேற்று சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள விசிக நிர்வாகி ஒருவர் வீட்டில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தங்கி மக்களவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று மாலை சுமார் இரண்டரை மணிநேரம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனையில் எதாவது கைப்பற்றப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர் இன்று ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறையினர் சம்மன் அளித்துள்ளனர். இந்த சோதனை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையும், பெட்டிகளையும் திறந்து பார்த்துள்ளார்கள்.

இந்த சோதனையில் எதுவும் கிடைக்கததால் திரும்பி சென்றனர். எந்த முகாந்திரமும் இல்லாமல் சோதனை நடத்துவது மறைமுகம் அல்லது வெளிப்படையான அச்சுறுத்தலாக பார்க்கிறோம். இது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே பொருளாதாரத்தில் பின்தங்கிய கட்சி. மக்களிடம் இருந்து பெறும் கொடைத்தொகையை வைத்து மாநாடு, பேரணி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் .

இந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இப்படி தான் இயங்கி வருகிறோம். இதுவரை வருமான வரித்துறை எங்களை சோதித்ததாக சரித்திரம் இல்லை. உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் இதுபோன்ற சோதனை நடத்தியதாக எந்த சான்றுகள் இல்லை. எனவே, அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்