ஆதவ் அர்ஜுனா பேசியது தவறில்லை.? திருமாவளவன் கூறியதென்ன.?
விசிகவை பொறுத்தவரை நான் என்ன பேசுகிேறனோ அதுதான் கட்சியின் நிலைப்பாடு. எங்கள் கட்சிக்குள் மாற்றுக் கருத்துகள் வருவது ஒன்றும் தவறில்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னை : கடந்த ஜனவரியில் விசிக கட்சியில் இணைந்து குறுகிய காலத்திற்குள் விசிகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிற்கு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுக பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.
“விசிக கூட்டணி இல்லாமல் வடமாநிலங்களில் திமுக ஜெயிக்க முடியாது.”,” சினிமாவிலிருந்து வந்தவர்களே துணை முதல்வர் (உதயநிதி ஸ்டாலின்) ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா.?” என்று அவர் பேசிய கருத்துக்கள் திமுகவினர் மட்டுமல்லாது விசிகவிலும் கூட எதிர்ப்பலைகளை உண்டாக்கியது.
” ஆதவ் அர்ஜுனாவின் கருத்து அரசியல் முதிர்ச்சியற்றது” என்று விசிக மூத்த நிர்வாகி துரை ரவிக்குமார் கூறினார். திமுக எம்பி.ஆ.ராசாவும் , ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு எதிர்வினையாற்றினார். இப்படியான சூழலில் ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் திலீபனின் 37வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ” விசிகவை பொறுத்தவரையில் அனைவருக்கும் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது. ரவிக்குமாரோ, அர்ஜுனாவோ கருத்து தெரிவித்தால் ஏன் அவ்வாறு தெரிவித்தீர்கள் என்று அவர்களிடம் கேட்பேன்.
விசிகவை பொறுத்தவரை திருமாவளவன் என்ன பேசுகிேறனோ அதுதான் கட்சியின் நிலைப்பாடு. எங்கள் கட்சிக்குள் மாற்றுக் கருத்துகள் வருவது ஒன்றும் தவறில்லை.” என்று ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்களும், துரை ரவிக்குமார் பேசிய கருத்துக்களும் தவறில்லை அது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். கட்சி தலைவராக தான் எடுக்கும் முடிவு இறுதியானது என்றும் கூறியுள்ளார் .
மேலும், ” தேர்தல் நிலைப்பாடு வேறு. மக்கள் போராட்டக்களம் வேறு. தேர்தல் தொகுதி சீட்டுக்காக ஆசைப்பட்டு முடிவெடுப்பவன் திருமாவளவன் அல்ல. நம்மை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். விசிக தேர்தல் வியூகங்களை வகுக்கக்கூடிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. எதிர்காலமும் , அதிகாரமும் நம்மை நோக்கி வரும் அதுவரை கூட்டணியில் பயணிப்பதே நமக்கு பாதுகாப்பானது. மக்களோடு நிற்பவர்களை யாராலும் அழித்துவிட முடியாது. ” என ‘ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா.? திமுக – விசிக கூட்டணி ‘ என பல்வேறு பேச்சுகளுக்கு பதில் அளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.