“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!
அண்ணாமலை கூறிய குற்றசாட்டு உண்மையில்லை. அந்த இடம் எங்களுடையது. ஆனால் இன்னும் அங்கு பள்ளி ஆரம்பிக்கப்படவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நடத்தும் பள்ளியில் மும்மொழி கொள்கை உள்ளது என குற்றம் சாட்டி வருகிறார்.
அண்ணாமலை விமர்சனம் :
விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால், சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக திருமாவளவன் இருக்கிறார். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? ” என பதிவிட்டுள்ளார்.
திருமா பேட்டி :
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவாவன் பேசுகையில், ” அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக பேசி வருகிறார். அவர் ஊடக விமர்சனத்திற்காக பேசி வருகிறார். அரசியல் நாகரிக அணுகுமுறையை முற்றிலுமாக தவிர்த்து விட்டு, யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்று நிலைபாட்டை அவர் எடுத்துள்ளார். அவரது அணுகுமுறை வியப்பாக உள்ளது. இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அந்த இடம் எங்களுடையது..,
எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது. அதற்கு இன்னும் அனுமதி கூட அவர்கள் வாங்கவில்லை. பள்ளி ஆரம்பிக்கப்படவில்லை. ஒரு மாணவர் கூட அதில் சேரவில்லை. அதற்குள் இடம் என்னுடையது என்பதால் எனது பெயரை அவர்கள் பயன்படுத்தினார்கள் அவ்வளவுதான். தமிழ்நாடு மாநிலத்திற்கும் மாணவர்களுக்கும் உண்மையிலேயே அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால், தமிழ்நாடு மாநிலத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை ஏன் ஒதுக்கவில்லை மத்திய அரசிடம் கேட்டு தர வேண்டும்.
பிரதமரிடம் முறையிட்டுள்ளாரா?
சிறுபான்மையினர், எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைகளை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து வருகிறது. உண்மையிலேயே அக்கறை இருந்தால் இந்தி படிக்க வேண்டும் என்று கவலைப்படுகிறவர் மத்தியில் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கவில்லை என்பது பற்றி ஏன் கவலைப்படவில்லை? இது பற்றி பிரதமரிடம் என்றைக்காவது முறையிட்டு உள்ளாரா அண்ணாமலை? EWS (உயர்சாதி ஏழைகள்) உதவி தொகை கிடைக்க வருமான உச்சவரம்பு 8 லட்சம். ஆனால் சிறுபான்மை, எஸ்சி/எஸ்டி வகுப்பினர் உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சம். இந்த சாதிய பாகுபாட்டை களைவதற்கு அண்ணாமலை என்ன செய்தார்?
இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?
இந்தி மீது எந்த வெறுப்பும் கிடையாது. அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழியையும் மதிப்போம் என்று முழங்கி வருகிறோம். இந்தி மொழியை இந்தியாவில் உள்ள அனைவரும் கட்டாயம் கற்க வேண்டும் என கூறுவதை தான் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிவருகிறோம். இந்தி படித்தால் வேலை கிடைத்து விடுமா? இந்த பார்வையே தவறு.
இந்த மொழி திணிப்பை அரசுப் பள்ளியில் தான் செய்ய வேண்டாம் என கூறுகிறோம். இந்தியா முழுக்க ஒரே கொள்கையை ஏன் திணிக்கிறீர்கள்? நம் பிள்ளைகள் பிடித்ததை படிக்கட்டும் என்பது வேறு, எல்லோரும் கட்டாயம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் தேவை என்ன ஏற்பட்டுள்ளது. ” என திருமாவளவன் கூறினார்.