விஜயுடன் எந்த முரண்பாடும் சிக்கலும் இல்லை., திருமாவளவன் விளக்கம்!
நானும் விஜயும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சிலர் அரசியல் சாயம் பூசிவிடுவார்கள் என்பதால் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் விகடன் பதிப்பகம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற விளக்கம் வெளியாகிவிட்டது. அதனை தற்போது வரையில் அறிக்கை மூலமும், செய்தியாளர் சந்திப்பின் மூலம் திருமாவளவன் விளக்கம் அளித்து வருகிறார்.
ஏற்கனவே, இந்த நிகழ்வில் நானும் விஜயும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டால் அரசியல் சாயம் பூசப்படும் என கூறிய திருமாவளவன், மீண்டும் அதனை உறுதிப்படுத்தி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதில், விஜயுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும், சிக்கலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவன் பேசுகையில், “இன்றைக்கு நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், விகடன் பதிப்பகம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியிடப்படுகிறது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். இந்த விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்.
புத்தகம் உருவாக்கப்படும் போதே ஆதவ் அர்ஜுனா மூலம் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு என்னுடைய நேர்காணலும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை.
இந்த சூழலில் தவெக மாநாடு நடைபெற்றது. அதில் விஜய் பேசிய உரை அரசியலில் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர் நானும், விஜயும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி ஒரு தமிழ் நாளேடு அந்த நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூசியது. ஒரு நூல் வெளியிட்டு விழாவாக முடிய வேண்டிய நிகழ்வை அரசியல் நிகழ்வாக அந்த செய்தி மாற்றியது.
நாங்கள் (விசிக) திமுக கூட்டணியில் 6,7 ஆண்டுகள் பயணித்து வரும் சூழலில், இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றால் அரசியல் குழப்பம் ஏற்படும். அப்படியொரு சூழல் வரவேண்டாம் என அதனை நான் தவிர்த்துவிட்டேன். சில செய்தி நிறுவனங்கள் பூதாகாரப்படுத்தி தலைப்பு செய்தியாக இதனை மாற்றிய காரணத்தால் நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மற்றபடி, விஜயுடன் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த முரண்பாடும் இல்லை. எந்த ஒரு சிக்கலும் இல்லை” என திருமாவளவன் கூறியுள்ளார். இதே கருத்தை நீண்ட நெடிய செய்தி குறிப்பாக பல்வேறு அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தாய்ச்சொல் – 06
——————-
யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!
— பகையின்
சூதுமறிந்தே தகர்த்தோம்!
———————
என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே வணக்கம்!” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” – இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும்… pic.twitter.com/OPrVg6uZwC
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 6, 2024