மக்களவை தேர்தல்: விசிக சார்பில் மீண்டும் திருமாவளவன், ரவிக்குமார் போட்டி!
VCK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் (தனி) தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!
இந்த இரு தொகுதிகளிலும் ஏற்கனவே போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரத்தில் 6வது முறையாக நானும், விழுப்புரத்தில் ரவிக்குமார் 2வது முறையாகவும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இதன்பின் அவர் கூறியதாவது, இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இந்த முறையும் நாடாளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியிடுகிறேன். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜகவை வீழ்த்துவதுதான் மக்களின் வேட்கையாக உள்ளது. ராகுல் காந்தி மேற்கொண்ட 2 பயணங்களும் நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதாற்கான பயணம்.
Read More – இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையர்கள்.. பிரதமர் மோடி உறுதி!
சாதி, மதவாத அரசியலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். மக்களவை தேர்தல் என்பது மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம். பாஜக, சங்பரிவார் அமைப்பு தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருவது ஆபத்தானது. இதனால் பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக்கூடாது .
பாஜகவோடு பாமக கூட்டணி வைத்திருப்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட மக்களை பாமக கைவிட்டாலும், விசிக துணை நிற்கும். பாஜக அணியில் ஒரே கூட்டணியாக இருந்தவர்கள் சிதறிப்போனார்கள். தேர்தல் முரண் இருந்தாலும், சமூகநீதி என்ற புள்ளியில் திமுக, அதிமுக ஒரே கருத்தில் தான் இருக்கும். தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
Read More – இந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம்… இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா.!
வடமாநிலம் போன்று தமிழ்நாட்டில் மதச்சாயம் பூசி அரசியல் செய்ய நினைக்கிறார்கள். தன்னுடன் சேரும் கட்சிகளை நீர்த்து போக செய்வதுதான் பாஜகவின் வேலை. திமுக கூட்டணி தான் தமிழ்நாட்டில் வலுவாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளது. எனவே, தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்திய அளவில் ஒரு அமைதி புரட்சி நடக்கவுள்ளது. மின்னணு இயந்திரங்களை வைத்து பாஜக சதி செய்ய முற்படுவதை மக்கள் முறியடிக்க வேண்டும் என கூறிய அவர், வரும் தேர்தலில் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.