வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர் குற்றவாளிகள்? சிபிஐ விசாரணை வேண்டும்… வலுக்கும் கோரிக்கைகள்! 

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் என கூறப்பட்ட 3 பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிபிஐ விசாரணைக்கு இதனை மாற்ற வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

VCK Leader Thirumavalavan - Vengaivayal - Pa ranjith

சென்னை : கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக முதலில் புதுக்கோட்டை காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அதில் குற்றவாளிகளை கண்டறியாமல் இருந்ததால், அடுத்த கட்டமாக 2023 ஜனவரியில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் கை மாறியது. அவர்களும் சுமார் 300 சாட்சியங்களையும், 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையையும், குரல் மாதிரிகளையும் பரிசோதனை செய்து தங்கள் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தின் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

சுமார் 700 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த விசாரணை தொடர்பாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி போலிசார் முன்னரே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது எனக்கூறப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விவரங்கள் நேற்று வெளியானது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்?

அதன்படி, ஆயுதப்படை காவலராக இருந்த முரளி ராஜா (வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்),  முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேர் தான் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில்  இச்சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்திருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

திருமாவளவன் அதிருப்தி :

இந்த குற்றப்பத்திரிகை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிவிடுகையில், சிபிசிஐடி தரப்பில் பிரமாண பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்து கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள். பட்டியலின சமூகத்தினர் குடிக்கும் குடிநீரில் மலம் கலந்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என காவல்துறை கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.

இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது எனவும், மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். ஆரம்பத்தில் இருந்தே போலீசார் பட்டியலின சமூகத்திற்கு எதிராக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தான் இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. சிபிசிஐடி போலீசார் இரண்டு ஆண்டுகள் மெத்தனமாகவே செய்ல்பட்டனர்.

நீதிமன்றம் ஒவ்வொரு முறை கடுமையாக அறிவுறுத்தியும் கூட, குற்றவாளிகள் யார் என காவல்துறை கூறவில்லை. தற்போது சிபிஐ வழக்கு விசாரணை கோரிய வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கருத வேண்டி உள்ளது. உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசே முன்வந்து ஒப்படைக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறோம்” என விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் காட்டம் :

இது குறித்து திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” யாரை காப்பாற்ற யாரை பலி கொடுப்பது? எனக்குறிப்பிட்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சிபிசிஐடி போலீசார் விசாரணை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதெல்லாம், குற்றவாளிகள் யாரென இனம் காணாத சிபிசிஐடி, இன்று திடீரென்று தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் குற்றவாளி என அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை. அப்படி என்றால் இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள்? உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இத்தகைய சூழ்ச்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் வலிக்கிறது. பிரச்சனையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகள் என கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது. தமிழக அரசு மறு பரிசினை செய்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.” என பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்