#அறநிலையத்துறை# சார்பில் -“திருக்கோவில் டிவி”ரூ.8.77 கோடி !!
தமிழ்நாடு இந்துசமய அறநிலைய துறை சார்பில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் ‘டிவி’ துவக்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் என்ற தொலைக்காட்சி துவக்க உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை ‘வீடியோ’ எடுத்து அனுப்ப கோவில் செயல் அலுவலர்களுக்கு அத்துறையின் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் வகையில் ‘திருக் கோவில்’ என்ற பெயரில் ரூபாய்.8.77 கோடி மதிப்பில் ‘தொலைக்காட்சி’ துவக்கப்படும் என்று தமிழகச் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட நிலையில் ஒளிபரப்புக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை எல்லாம் ஒளிப்பதிவு செய்து தேவையான ‘எடிட்டிங்’ மற்றும் வர்ணனைகளை இணைக்கும் பணிகள் தற்போது துவக்கப்பட்டு விட்டன.
திருக்கோவில் ‘தொலைக்காட்சி’யில் நாள் முழுதும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால்,இதற்கு அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுகின்றன.எனவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களில் நடக்கின்ற பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ‘4k Resolution Camera’வைத்திருக்கும் வீடியோகிராபர்களின் மூலமாக ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வீடியோ ஆவண படங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும் போது என்ன கடைப்பிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது:
அதன்படி கோயில் வளாகம், முகப்பு விமானங்கள், கோபுரங்கள், கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள் இடம்பெற வேண்டும். கோயில் அமைவிட விபரங்கள் தெளிவாக இடம்பெற செய்ய வேண்டும்
கோவிலின் தல வரலாறு; பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன் அதில் இடம்பெற வேண்டும்.கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் பின்னணியில் இருக்கும் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்களை இசை உடன் அதில் இருக்க வேண்டும்.
கோவிலில் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களை எல்லாம் 30 வினாடிகள் வரும்படி மிக சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்; பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்களையும் ஒளிப்பதிவில் இடம்பெற வேண்டும்
மேலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அவை நடக்கும் நேரம், தங்கரதம் போன்றவற்றுக்கான கட்டண விபரங்கள் ; நடக்கும் நேரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். கோயிலில் மண்டபங்கள் இருந்தால் அவை குறித்த தகவல்களை தெரிவிக்கும் போது மண்டபத்திற்கான சரியான பெயரை குறிப்பிட வேண்டும்
கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் காட்சியில் வரும் போது அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிக துாய்மையாக அணிந்திருக்க வேண்டும்.ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் மிகவும் துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.
முக்கியமாக ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப திரும்ப ஒளிப்பதிவில் இடம்பெறக் கூடாது. ஒளிப்பதிவு காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்.ஒளிப்பதிவானது அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் போது முழு உருவத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.மேலும் கோவிலின் மூலிகை ஓவியங்கள், புராதன கல்வெட்டுகள் இருந்தால் அதற்கான படங்களும் அது சார்ந்த செய்திகளும் உடன் ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்த கடித்தில் அறத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளார்.