“என் போனை ஒட்டு கேக்குறாங்க” நயினார் மாதிரி தான் எனக்கும் – சீமான் ஆதங்கம்!
நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராது எனவும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பு எனவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். தனது உரையாடல்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் எனவும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து தற்போது நதாக ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாஜகவின் நயினார் நாகேந்திரன் தனது தொலைபேசி உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால், என் உரையாடல்கள் கடந்த 20 ஆண்டுகளாகவே ஒட்டுக் கேட்கப்படுகின்றன.
இந்தியாவில் கண்காணிக்கப்படும் 50 தலைவர்களில் நானும் ஒருவன். இது முற்றிலும் அநாகரிகமான, அப்பட்டமான தனிமனித உரிமை மீறல். இந்த நாட்டில் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக, நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி என்று போராட்டம் நடத்துகிறது. தேர்தல் காலத்தில் இப்படியான நாடகங்கள் அரங்கேறுவது வழக்கம்தான். முதல்வர் பெருமையாக சொல்கிறார், திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக. இதில் என்ன பெருமை? ” எனவும் காட்டத்துடன் கேள்வி எழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆயிரமாவது நாளாக போராடுகிறார்கள். அங்கே விமான நிலையம் உருவாக முடியாது. நான் அதை அனுமதிக்கவே மாட்டேன்” எனவும் சீமான் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.