“முன்பை விட இப்போ கடுமையாக விமர்சிப்பார்கள்”.. விமர்சனங்கள் குறித்து த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை!

நம் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம் என த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

tvk vijay speech

சென்னை : அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சியின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. அதைப்போல மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் தொண்டர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில். மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அவர்களுடைய தொண்டர்களிடையே எவ்வளவு ஆதரவு பெற்று வந்ததோ அதே சமயம் அதற்கு எதிராக அரசியல் தலைவர்களிடம் எழுந்த கருத்துக்கள் பல விஜயின் பேச்சுக்கு எதிர்மறையான விமர்சனங்களாகவே அமைந்தது.

குறிப்பாக,  தவெக தலைவர் விஜய் கூறிய கருத்துக்களில் தெளிவில்லை என்றும், இந்த மாநாடு இன்னொரு படப்பிடிப்பு போல இருந்தது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்து பேசியிருந்தார். அதைப்போல, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விஜய் பேசியது சினிமா வசனம் சினிமா வசனத்தையெல்லாம் கொள்கையா எடுத்துக் கொள்ளாதீர்கள் என பேசியிருந்தார்.

இப்படி விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கும் சூழலில், த.வெ.க தலைவர் விஜய் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் மூலம், மாநாட்டில் பேசியதற்கு எழுந்த விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது ” நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் ‘தீவிர அரசியல் செய்தலாக’ இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம்.

தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி. தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன.

நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம்” என விஜய் கூறியுள்ளார்.

இதன் மூலம் யார் விமர்சித்தாலும் வெளிப்படையான மக்களுக்கான மக்களாட்சியை தான் நாங்கள் கொடுப்போம் என விஜய் சொல்லி இருக்கிறார் என்று தொண்டர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்