“இவர்களுக்கும் இவை தேவை” – முதல்வருக்கு எம்.பி.ரவிக்குமார் முக்கிய கோரிக்கை!
விழுப்புரம்:நடப்பு ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பொதுத் தேர்வு எதையும் சந்திக்காதவர்கள்,எனவே இவர்களுக்கு ஒரு திட்டத்தை முதல்வர் வடிவைக்க வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டத்தின் கீழ் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி மாணவர்களின் வீடுகளில் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும்.இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,கடந்த அக்.27 ஆம் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வி’ போல கல்லூரி மாணவர்களுக்கும்,ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வடிவமைக்க வேண்டுமென விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“இந்த ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பொதுத் தேர்வு எதையும் சந்திக்காதவர்கள்.கிராமப் புறங்களிலிருந்து வந்துள்ள மாணவர்களில் பலர் ‘ஆன்லைன் கல்வி’ பெற முடியாததால் கல்வித்தரத்தில் 10 ஆம் வகுப்பு நிலையில்தான் உள்ளனர் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதுபோலவே முதலாண்டில் சேர்ந்து இப்போது இறுதியாண்டில் உள்ளவர்களுக்கும் பட்டப் படிப்பை முடிப்பது சவாலாகவே இருக்கும். எனவே ‘இல்லம் தேடிக் கல்வி’ போல கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு திட்டத்தை வடிவமைக்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
அதுபோலவே முதலாண்டில் சேர்ந்து இப்போது இறுதியாண்டில் உள்ளவர்களுக்கும் பட்டப்
படிப்பை முடிப்பது சவாலாகவே இருக்கும். எனவே ‘இல்லம் தேடிக் கல்வி’ போல கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு திட்டத்தை வடிவமைக்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/YH14j1eaOM— Dr D.Ravikumar M P (@WriterRavikumar) November 23, 2021