தமிழ்நாட்டை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள் – திருமாவளவன்
பாஜக அரசை சேர்ந்தவர்கள் பேசுவது பேசுவதைப் போல ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என்றும், மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
ஆளுநரின் இந்த பேச்சு குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சேக் முஹம்மது அவர்கள் கூறுகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வன்மமான பேச்சால் அவதூறுகளை வாரி இறைத்துள்ளார். ஆளுநரின் பேச்சு அடிப்படை முகாந்திரம் இல்லாத தவறான கருத்து. தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளுநரின் பேச்சு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறுகையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தமிழக ஆளுநர் கடுமையாக விமர்சித்துள்ளார். தீவிரவாத அமைப்பு என்றும், ஐஎஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆள் பிடித்துத் தரும் அமைப்பு என்றும் பாஜக அரசை சேர்ந்தவர்கள் பேசுவது பேசுவதைப் போல ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டை அவர்கள் குறி வைத்து விட்டார்கள். வன்முறைக்கு வித்திடுகிறார்கள். மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தீவிர படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த பேச்சு ஒரு சான்றாக இருக்கிறது. ஜனநாயக சக்திகள் விழிப்போடு இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.